Monday, December 31, 2007

உயிரே..

உன்னை உன்னை

நிலவே என்றேன்..!! நிலவே என்றேன்..!!
அம்மாவாசை ஆனாய்.... என் வாழ்வின் பெளர்ணமியானாய்...
மலரே என்றேன்..!! மலரே என்றேன்..!!
உதிர்ந்து போனாய்.... மணம் பரப்பினாய்....
அறிவே என்றேன்..!! அறிவே என்றேன்..!!
மூடனாக்கினாய்.... அறிஞனாக்கினாய்....
அன்பே என்றேன்..!! அன்பே என்றேன்..!!
இதயம் கொன்றாய்.... உனதன்பில் திளைக்க வைத்தாய்....
மின்னலே என்றேன்..!! மின்னலே என்றேன்..!!
நொடியில் மறைந்தாய்.... ஒளியையை தந்தாய்....
மயிலே என்றேன்..!! மயிலே என்றேன்..!!
சிறகொடித்தாய்.... நாட்டியமாடினாய்....
குயிலே என்றேன்..!! குயிலே என்றேன்..!!
ஊமையாக்கினாய்.... பாடகனாக்கினாய்....
வான‌மே என்றேன்..!! வான‌மே என்றேன்..!!
இடியாய் விழுந்தாய்.... மழையாய் பொழிந்தாய்....
நிறமே என்றேன்..!! நிறமே என்றேன்..!!
வெற்றிடமானாய்.... வானவில் ஆனாய்....

உன்னை..... உன்னை.....
உன்னை..... உன்னை.....

உயிரே என்று சொல்லவா? உயிரே என்று சொல்லவா?
அய்யோ..!! என்னை விட்டு என்னுள்
போய்விட்டால்...??? ஒன்றிவிடுகிறாயா?

என் தாய் தந்தையரை யார் காப்பாற்றுவது?? நீ யாரோ, எவளோ அல்ல...
வேண்டாம்... என்னவள்..!!
நீ யாரோ.. எவளோ...!!! என் உயிரானவள்...!!!!!!

(Select the above kavithai.. And read the new one alone... )

நட்பு

கண்களிலிருந்து
வழியும் கண்ணீர்
கன்னப்பரப்பை ஈரப்படுத்துமுன்
தன் அன்பினால்
அணைகட்டுவதே

நட்பு !!!

உன் அன்பு..

உன்னை நிலவுடன்
ஒப்பிடவா?
வேண்டாம்...

நிலவிற்கு
தேய்வதும் வளர்வதுமாய்
இரு உருவங்கள் ..!!

உன் அன்பிற்கு அது இல்லை...
என்றும் தேயாத‌
ஒற்றை முழு உருவம் போல்...!!!

ஞானி

மனம் ஒரு மாயக்கண்ணாடி..!!
ஆம்..
ஆயிரம் விதமான முகங்களை
ஒரே சமயத்தில்
பிரதிபலிக்கிறது...

தன் உண்மை முகத்தை
தானே பார்க்க முடிவதில்லை..

இதில் வென்றவர்கள்தான்
ஞானி ஆகிறார்கள் போலும்..!!!!!

அரசியல்வாதி

தனது அரியணை மோகத்திற்காகவும்
பதவி ஆசைக்காகவும்
சில தலைமுறைகளின்
முன்னேற்றத்தை
முளையிலேயே
கிள்ளி எறியும்
பச்சோந்திகள்... !!!

ஆயுள் முழுவதையும்
அரசியலில் கழித்து
தன் கட்சியின் கொள்கை
தானே அறியாமல்
மண்ணில் விழுந்து
மறையும் மூடர்கள்...!!!

Wednesday, December 19, 2007

தனிமை

நிலாமகள் வானவீட்டில் புகுந்து
நட்சத்திர தோழிகளுடன்
கண்ணாமூச்சி விளையாடுகிறாள்..

அதோ !!
மறைந்து விட்டாள் மேகத்திரையின் பின்னே...

அந்த மெல்லிய இளங்காற்று வீசும்
இரவு பொழுதில் மொட்டை மாடியில்
படுத்துக் கொண்டு நானும் தான்
அவளை கண்டு பிடிக்க முயற்ச்சிக்கிறேன்.....

அருமையான விளையாட்டு..

யார் சொன்னது?
தனிமை கொடுமை என்று..

Tuesday, October 16, 2007

நட்பு...

விழுகையில் தாங்குவது
மட்டுமல்ல நட்பு...
விழுகையில் தாங்க நானிருக்கிறேன் என்று
முதலில்
எழவைப்பதே

நட்பு!!!!

பிராத்தனை.........

உனக்கான
என் பிராத்தனைத்தட்டில்
கொத்துக்கொத்தாய்ப்
பூக்களை
வைத்தேன்........
கடைசியில்-
என் கோரிக்கை
வைக்க
இடமில்லை.................

இளைய சமுதாயமே...

ஏ இளைய சமுதாயமே!!!
நிமிர்ந்து நில்...
தொடர்ந்து முன்னேறு.....

இங்கே பார்....
ஒரு நாள் ஆயுளைக் கொண்ட ரோஜா
எவ்வளவு அழகாக
புன்னகை புரிந்து
மலர்ந்தாடுகிறது என்று........

கவிதை...

என்
கவிதைகள்தான்
எத்தனை அழகு
என்ற என் நினைப்பில்
கல்லெறிந்ததடி


உன் சிரிப்பு.............

Monday, July 30, 2007

புரியாத புதிர்கள்!!!

பெண்ணே..
உன் அழகிய
இதழ் மொட்டை விரித்து
வார்த்தைப் பூக்களை மலரவிடு!!!

மலராத பூக்கள்
மணம் பரப்புவதில்லை..

ஆனால்..
உதிர்க்காத உன் வார்த்தைப்
பூக்கள்கூட‌
அதன் மெளனத்தால்
என் மனம் பறிக்கிறது!!!

இதெப்படி சாத்தியம்?

ஆம்..
சில விஷயங்கள்
பல காலமாய்
புரியாத புதிர்களாகத்தான் உள்ளது!!!

Monday, July 16, 2007

பிரியாத‌ வ‌ர‌ம் வேண்டும்!!!

நீயாக நான் மாறிவிட்டால்
துன்பங்கள் குறையுமோ?


துன்பங்கள்தான் வாழ்வை
வளமாக்கும் தூண்களாம்..


துன்பங்கள் அளவுக்கதிகமான‌
இன்பத்தின் குழந்தைகள்..

துள்ளி விளையாடும்
மீன்களுக்கில்லை துன்பம்..
மீன‌வ‌ன் வ‌லைவீசும்வ‌ரை!!

காற்றில் அசைந்தாடும்
ம‌ல‌ருக்கில்லை துன்ப‌ம்..
ம‌ங்கையின் க‌ண்க‌ளில் ப‌டாத‌வ‌ரை!!


வளர்ந்து செழித்திருக்கும்
க‌ரும்புக்கில்லை துன்ப‌ம்..
யானைக‌ள் கூட்ட‌ம் வ‌ரும்வ‌ரை!!


புதுக‌வி பாடும்
க‌விஞ‌னுக்கில்லை துன்ப‌ம்..
மொழியின் அழிவுக்கால‌ம் வ‌ரும்வ‌ரை!!

கிருஷ்ண‌னையே நினைக்கும்
ம‌ன‌திற்கில்லை துன்ப‌ம்..
அவ‌னை ம‌ற‌வாத‌வ‌ரை!!

என‌க்கும் என்றும்
இல்லை துன்ப‌ம்..
நீ என்னை பிரியாத‌வ‌ரை!!


பிரியாத‌ வ‌ர‌ம் வேண்டும்!!!

Tuesday, July 10, 2007

நட்பு

நட்பு என்பது
மாலை நிழல் மாதிரி.............
வாழ்க்கைச் சூரியன்
அஸ்தமிக்க அஸ்தமிக்க
அந்த நிழல்
அடர்த்தியாகிறது............
அழகாகிறது............

புன்னகை

உன் முகத்தில் என்றும்
புன்னகை பூவை மலரவிடு...

உன் பெருமை மணம் பரப்பும்
பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளும்...

நண்பர்களைத் தேடித்தரும்...

விரோதிகளை குறைக்கச்செய்யும்...

மதிப்பினை அதிகப்படுத்தும்...

மனதை அமைதிப்படுத்தும்...

உணர்வுகளை புதுப்பிக்கும்...

உள்ளத்தை மகிழ்விக்கும்...

நோயினை விலகிடச்செய்யும்...

இளமையை நம் வசப்படுத்தும்...

கனவுகளை உற்பத்திசெய்யும்...

புன்னகை
ஒரு தொடர்சங்கிலி போல..
முதல் வளையம்
நீ என்றால்
நீ காண்போர் எல்லாம்
அந்த சங்கிலியில்
தன்னையுமறியாமல் இணைவார்கள்...

எவ்வித இழப்புமில்லாமல்
கிடைக்கும் இத்தனையையும்
இழந்து விடாதே...

ஆம்.........

புன்னகை

நீ உயிரோடிருக்கிறாய்
என‌ உல‌குக்கு
உண‌ர்த்தும்......

ஆத‌லினால் புன்ன‌கை செய்வீர்.....

வாழ்க்கைப் படகு

எதிர்ப்பலைகளை கண்டு
பயந்தால் என்னாவது?

ந‌ம்பிக்கை துடுப்பை
க‌டின‌ உழைப்புடன்
விடாமுய‌ற்சியுட‌ன் போடு..

வாழ்க்கைப் படகு சுமூக‌மாக‌ க‌ரைசேரும்!!!

முரண்பாடு..

சாதிகள் இல்லை என‌
சொல்லித்தருவார்களாம்
பள்ளியில்..

முத‌லில்‍‍‍‍‍-
பள்ளியில் சேர்க்க‌
சாதி கேட்டார்கள்..!!!!

திருடி...

சூரிய காவலன் வரும்முன்
தன் நட்சத்திர
கொள்ளைகூட்டத்துடன்
அவ‌ச‌ர‌மாய் ஓடிவிட்டாள்
நிலா திருடி..


அனைவ‌ரின் இத‌ய‌ங்க‌ளையும் திருடிவிட்டு...!!!

ஹைக்கூ....

வெள்ளை வானத்தில்
கருப்பு நிலா.....

----கருவிழி

மழை

அன்பே..
சின்ன மழை தூறலில் கூட‌
ஆனந்தமாக ஆடுகிறாய்....

ம‌ழை பிடித்த‌தால்தானோ
என்ன‌வோ
என் க‌ண்க‌ளிலும்
ம‌ழை சொரிய‌ வைக்கிறாய்...

தேய்பிறை

சந்திரலோகத்திலும்
பஞ்சம் வந்துவிட்டதோ!!!
கொஞ்சம் கொஞ்சமாக‌
தேய்கிறாயே.......

Monday, July 9, 2007

மீட்டாத வீணை

உன்னுள்
பொதிந்து கிடக்கும்
ஆயிரமாயிரம் சுவரங்களை
வெளிக்கொணர கைகள் இல்லையோ...

மனிதா...
உனக்குள்
பொதிந்து கிடக்கும்
ஆயிரமாயிரம் ஆற்றல்களை
வெளிக்கொணர உனக்கும்
வழிகள் இல்லையோ...

ஏன் இல்லை......

மீட்டாத‌ வீணையாக‌
முட‌ங்கி போகாதே...

ந‌ம்பிக்கை கை கொண்டு
ச‌ந்தோஷ‌ கான‌ம் வெளிவ‌ர‌
வாழ்க்கை வீணையை மீட்டு.....

வென்று காட்டு!!!

உளியின் வலி

சீரான உருவமில்லா
எத்தனையோ விதமான‌
கற்களை
கண்டிருக்கிறேன்!!

மிக கடினமான
பாறைகளையும்
கண்டிருக்கிறேன்!!

என்னை உருக்கி
உருக்கி
அவற்றிற்கு உருவம்
கொடுத்தேன்...

என்னுயிர் வலிக்க
வலிக்க‌
அவற்றிற்கு வடிவம்
கொடுத்தேன்...

இதோ இன்று அவை
விலை போகின்றன..
வருபவர்களெல்லாம்
அவற்றின் பெருமை
பேசுகிறார்கள்....

நான் ஒரு
மூலையில்...
பார்ப்பார்
யாருமில்லை...
கேட்போர்
எவருமில்லை...

இந்த உளியின்
வலியை யாரறிவார்...
என்னைப்போல
உளியே அறியும்...

ஆனாலும் நான்
சந்தோஷத்துடன்........

நான் அழிந்தாலும் என்
படைப்புகள்
எங்கோ வாழ்கின்றன...
என் புக‌ழ் ப‌ர‌ப்புகின்ற‌ன‌...
என்னாலான‌தை விட்டு
செல்கிறேன்...

ஏ ம‌னிதா...
என்னால் முடிந்த‌து
உன்னால் முடியாதா??
நீ யாரையும் செதுக்க‌
வேண்டாம்...

உன்னை நீயே
செதுக்கிகொள்...

ஏக்கம்

பூத்துக்குலுங்கும்
பூக்களெல்லாம்
உனக்காகவே மலர்ந்தன
போலும்

நீ தீண்டாத பூக்களெல்லாம்
தாங்கமாட்டாத
சோகங்களுடன்!!!!

நீ வாங்கும் மூச்சுக்காற்றாக
விரும்பும் வாயுமண்டலம்
உன்னைச்சுற்றியே!!!!

நீ உடுத்தும் ஆடைகளாக
விரும்பும் பருத்திச்செடிகள்!!!!

நீ பேசும் வார்த்தைகளாக
விரும்பும் மொழிகள்
கவிநயத்துடன்!!!!

நீ நடக்கும் பாதையாக‌
விரும்பும் கடற்கரை மணல்
ஈரப்பதத்துடன்!!!!

நீ இருக்க வேண்டும் என‌
மிக விரும்பும் என் மனமும்
ஏக்கத்துடன்!!!!