Wednesday, August 20, 2008

விழி வியூகம்


விழிகளால் வியூகம் வகுத்து,
புன்னகையால் என் மனக்கோட்டையில் நுழைந்து,
மெளனத்தால் என்னைக் கொன்று,
காதல் போர்க்களத்தில் நிதம் நிதம் வெற்றி பெற்று,

அன்பே...
நீ அபிமன்யுவையும் மிஞ்சி விட்டாய்...
அவன் தன் சக்கரவியூகத்தில் சிக்குண்டு மாண்டான்..

நானோ உன் சித்திரவிழி வியூகத்தில்
விழுந்து செத்து கொண்டிருக்கிறேன்....

Monday, July 7, 2008

எழுத்தாளன்....


இவன் எழுதுகோலில் ஏறும்
ஒரு சொட்டு மைத்துளி
ஓராயிரம் பேர்களின்
தலையெழுத்தை மாற்றவல்லது..!!!
அது நாட்டில் ஊடுருவி
நடமாடும் புல்லருவிகளை
தினம் தினம் அறுவடை
செய்யும் போர்வாள்...!!!
அது அரசியல் ஆட்சியை
அடியோடு தடம் புரட்டி
புடம் போடும்
ஆற்றல் வாய்ந்த உலைத்தீ...!!!
பிடித்திருக்கும் அவனது
கையையும் கூர்பார்க்கும்
இருமுனைக் கத்தி...!!!
உண்மை எழுதும் ஒரு எழுத்தாளனின்
உயிர்மூச்சு காற்றில் உலவும்வரை
நல்லவர் வீழ்ந்து தீயவர் எழும்
காலம் என்றும் வரப்போவதில்லை...!!!

Friday, July 4, 2008

கவிகரு...



மேகங்கள் முட்டி சூரியன்
தேய்ந்துவிட்டதென்பதைப் போல...
கருமி தானத்தின் பெருமையை
எடுத்துச் சொல்வதைப் போல...
பெண் தனதடிமையென மைந்தன்
தாயிடம் கூறுவதைப் போல...
பித்த மயக்கத்திற்கு மலடி
மகிழ்ச்சியடைவதைப் போல...
வாய்வார்த்தையிலே மட்டும் வீரம்காட்டும்
கோழை ஆடவனைப் போல...

கருவற்ற கவிதை பொருளற்றது.. பயனற்றது..

அது கவிஞனாகிய தாய் பிரசவிக்கும்
உயிரற்ற குழந்தையைப் போன்றது...!!!

Thursday, July 3, 2008

மரத்தாய்...


உயிர் ஆதார சுவாச காற்றைத் தருகிறாள்..
பசி தீர்க்க கனிகளால் உணவளிக்கிறாள்..
தன்மடி நிழலால் குளிரச்செய்கிறாள்..
மன அமைதியைத் தருகிறாள்..
பூந்தென்றலால் மகிழ்விக்கிறாள்..
தஞ்சம் புகுந்தவர்க்கு வஞ்சம் பாராதவள்...

தாயிலும் மாற்றாந்தாய் இங்குண்டு...

இருப்பின் அனைவருக்கும் அனைத்தும் நல்கும்
இவள் ஓர் இணையற்ற தாயாகிறாள்..

ஆயினும் இங்குபோல் எங்கும்
தாயைக் கொல்லும் மக்களை யாம் கண்டதில்லை...!!!


Tuesday, June 24, 2008

நாட்டியப் போட்டி..!!!

போட்டியில்
பங்கு கொண்டால்
அனைத்து பரத கலைஞர்களையும்
வென்று விடுமடி
உன் கண்கள்..

என்ன அழகாக‌
நாட்டியமாடுகிறது...!!!

வேதனை..

பெண்ணே...!

உன் புருவவில் வளைத்து
விழி அம்புகளை வீசுகையில்
வலித்தாலும்

மனம் ஏனோ
அந்த சுக வேதனையையே
விரும்புகிறது...!!!

கண்கள்..

காதலை இலவசமாக
இடம் மாற்றும்
அஞ்சலகம்...!!!

Thursday, May 29, 2008

அன்புத்தோழி...!!!



தோழி,
உன் துயரங்களுக்கு
சமாதி கட்டு
இன்றோடு......
துணிவுடன் புறப்படு.....
தூய அன்பு ஒன்றே அஸ்திரமாக....

இவுலகம் உன் வசப்படும்.....
என எனக்குச் சொன்னவள் என்தோழி....

அன்பை வாரி வழங்குகிறாள் வள்ளலைப் போல....
நானும் அவளிடம் யாசகம் கேட்க காத்திருக்கிறேன் தினமும்....

தோழி..,
உன்னிடம்
நட்பு கொண்ட பின்புதான்
வாழ்க்கையை
ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்......
உன்னிடம்
பழகிய பிறகுதான்
பூக்களிடம்
பேச ஆரம்பித்திருக்கிறேன்......

உன் நட்பு
தகரத்தையும் தங்கமாய்
மாற்றும் வகையில்
புடம் போடுகிறது........

என்றென்றும்
நான் உன் தோழியாய்
இருப்பேன் என
ஒற்றைச் சொல்லில்
என் உலகத்தை இயங்க
வைத்த அன்புத்தோழியே...!!!

உனக்கான‌
என் வார்த்தைகளும்......
என் வாழ்த்துகளும்......
தொடர்ந்து கொண்டே இருக்குமடி...!!!

Monday, May 5, 2008

அரசியல் வண்டுகள்..


இந்த அரசியல் வண்டுகள்(தேனீக்கள்..?)
அழகிய மலர்களை காட்டி
தேன் சேகரித்து தருவதாக‌
மக்களை வசீகரிக்கின்றன...

ஏனோ இந்த அப்பாவி மக்கள்
வண்டுகள் காட்டும் அம்மலர்கள்

காகித பூக்கள் என்பதை
உணர்வதே இல்லை...!!!

Friday, May 2, 2008

கவிதையைத் தேடி...



கவிதை எழுத நல்சூழல் தேடி
இளமாலையில் பூங்காவின்
ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்...

கவிகரு தேடி கண்கள் அலைபாய்ந்தன...

மரத்திலிருந்து மெளன மொழி பேசிக்கொண்டே
உதிரும் பூவரசம் பூக்கள்...

மெல்லமாய் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே
இதழ்களை விரிக்கும் ரோஜா மொட்டு...

தன்னுடன் அன்றவிழ்ந்த மலர்களின் மணத்தையும்
இழுத்துக்கொண்டு உலவும் தென்றல்...

ஏதோ நினைவுகளில் ஆழ்ந்து தன்
வெண்தாடியைத் தடவும் முதியவர்...

பட்டுப்பூச்சிகளாய் ஓடி விளையாடித்
திரியும் மழலைகள்..

கரிய நிழல் அடர்ந்த மரங்களைத்
தேடும் காதலர்கள்...

என்ன எழுதுவதென்றே புரியாமல்
சில நேரம் சிந்தனையில் கழித்து
மெல்ல எழுந்து மெளனமாய் நடக்க ஆரம்பித்தேன்...

-

Monday, April 21, 2008

இதற்குப் பெயர்தான் காதலா...?

உன் ஈர தென்றல் பார்வை
என் நினைவு மேகங்களை கலைத்ததால்
பொழியும்
இந்த கவிதை மழைக்குப் பெயர்தான்

--காதலா???


Thursday, April 17, 2008

நட்பு...!!!

உன்னிடமிருந்து
எதிர்பார்ப்பதற்கும்
என்னிடமிருந்து
கொடுப்பதற்கும்
இதைவிட உயரிய‌
பொருள் இருக்கிறதா என்ன...?

Wednesday, April 16, 2008

என் பேனா...!!!

என் பேனா தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும் கடைசி நேரத்தில்
ஆசையுடன் ஒரு கோரிக்கை வைத்தது..!!!

'என் உயிர் பிரிகையில்
தேன் சொரியும் ஒரு கவிதைக்கு
உயிர் கொடுக்க வேண்டுமென..'

அழகிய வெண்தாளை எடுத்து
எழுதினேன் உன் பெயரை...!!!

பேனா தெரிவிக்கும் நன்றியையை
இதோ.. என் விரல் வழியில் உயிர் உணர்கிறது...!!!

Thursday, April 10, 2008

சூரியகாதலன்...!!!

நிலவு மணாளனின்
பிரிகையால் அல்லி ராணிகள்
துயருற்று முகம் கூம்பி இருக்க‌
சூரிய காதலனின்
வருகையால் செந்தாமரையாய் நான்
அகமும் முகமும் மலர்கிறேன்...
‍நிலவானது சூரியனிடம்
ஒளி பெற்று பிரதிபலிப்பதைப் போல‌
இவ்வுலகின் அனைத்து ஆடவர்களும்
உன் குண பண்புகளை
பிரதிபலிக்க முயன்று தோற்கிறார்கள்..

யாராலும் உன்னைப்போல் இயங்க இயலாது..

ஆம்..
நீ ஒரு சூரியகாதலன்...!!!

Thursday, April 3, 2008

அப்பா..!!!

இவனின் சிறுபருவத்தில்
அவர் காட்டிய அன்பு..
புரியாத வினாக்களுக்கு
அவரளித்த விளக்கம்..
நோயுற்ற நாட்களில்
அவரின் அரவணைப்பு..
பள்ளி பருவத்தில்
அவரின் கண்டிப்பு..
மதிப்பெண் குறைந்ததில்
அவரிடம் பட்ட அடி..
கல்லூரியில் சேர்க்க
அவர் பட்ட கஷ்டம்..
வேலை சிபாரிசுக்கு
அவர் அலைந்த நாட்கள்..
திருமணம் செய்விக்க ‌
அவர் பெற்ற கடன்..
பெரும் கடமையை முடித்ததில்
அவரடைந்த ஆனந்தம்..
பேரபிள்ளைய கொஞ்சுகையில்
அவரின் பரவசம்..

இதோ..
இன்று ஒரு தந்தையின்
‌கடைமையை இவ‌ன் ஆரம்பித்திருக்கிறான்..
தந்தையை காண முதியோரில்லம்
செல்கிறான் மகனோடு..
சுருக்கம் விழுந்த முகத்தில்
வேதனை ரேகைகள் ஓடுகின்றன..
ஆனந்தமாய் அரைமணி நேரம் கழித்து
விடை பெறுகையில் சொன்னார்..
மகனே..
ஒரு கடமை மிஞ்சியிருக்கிறது..
உனக்கு கொடுக்க வேண்டிய‌
பொருள் ஒன்று இருக்கிறது..
இந்த கைத்தடியை வைத்துக்கொள்
பிற்காலத்தில் உதவுமென்றார்..
கண்களில் அருவி வழிய‌
தந்தையின் அன்பை உணர்கிறான்
இவ‌ன் இப்பொழுது...
ஒன்றும் புரியாத பேரனோ
இருவரையும் மாறி மாறி பார்க்கிறான்...

Tuesday, March 25, 2008

கடவுளின் குழந்தைகள்...!!!

இவர்களுக்கு
பெற்றோரிருந்தும் இில்லாததால்
சமூகமே பெயர் சூட்டும் ‍
அனாதை என்று...

மலர்களின்
மகரந்த சேர்க்கையில் தவறிருக்க‌
துளிர்க்கும் தளிர்களை
சமூகம் சபிப்பதென்ன நியாயம்?


வாருங்கள் தோழர் தோழியரே..

நாமும் ஒரு கை கொடுப்போம்..

இந்த பூந்தேர்களை
வாழ்க்கைப் பாதையில் இழுக்க‌
வடம் பிடிப்போம்..!!!